வெள்ளம் வடிந்த பின் வருவதா? அமைச்சர்கள் மீது மக்கள் ஆத்திரம்
வெள்ளம் வடிந்த பின் வருவதா? அமைச்சர்கள் மீது மக்கள் ஆத்திரம்
ADDED : ஜூலை 22, 2024 06:33 AM
உடுப்பி: 'அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கடற்கரையை பார்க்க வந்தாரா' என உடுப்பி மக்கள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
கர்நாடக கடலோர மாவட்டமான உடுப்பியில், ஒரு மாதமாக கன மழை பெய்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர். விளைச்சலை இழந்து விவசாயிகளும் வருத்தத்தில் உள்ளனர்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், மாவட்டத்தை எட்டி கூட பார்க்கவில்லை. தற்போது மழை குறைந்துள்ளதால், ஆங்காங்கே வெள்ளம் வடிந்து வருகிறது.
மழை சேதங்களை பார்வையிட, லட்சுமி ஹெப்பால்கர் நேற்று உடுப்பியின் குஜ்ஜரபெட்டாவுக்கு வந்தார்.
நாவுந்தா, நால்குன்டா, படாகெரே பகுதிகளில் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருந்தன. சில வீடுகளையும், சோமேஸ்வராவில் மண் சரிவை தொலைவில் இருந்து பார்த்து விட்டு திரும்பி சென்றார்.
மேலோட்டமாக ஆய்வு செய்த அமைச்சர் மீது, மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 'அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், உடுப்பியில் கோவிலை பார்க்க வந்தாரா; கடற்கரையை பார்க்க வந்தாரா. ஒரு மாதமாக மழை பெய்கிறது. கடந்த பத்து நாட்களாக கன மழையால் அவதிப்பட்டோம்.
அப்போது வராத அமைச்சர், வெள்ளம் வடிய துவங்கிய பின் வந்துள்ளார். அவர் மாவட்டத்திலேயே தங்கி, மழையால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தினர்.
இதேபோன்று, குடகு மாவட்டத்தின், ஜம்பூர் கிராமத்துக்கு மழைச்சேதங்களை பார்வையிட சென்ற அமைச்சர் போசராஜுவும், மக்களின் அதிருப்திக்கு ஆளானார்.
'வெள்ளம் சூழ்ந்த போது வராத நீங்கள் வரவில்லை. மழை குறைந்த பின் வந்துள்ளீர்கள்' என, மக்கள் வசைபாடினர்.