ரூ.60,000 விற்கப்பட்ட குழந்தை: ஓராண்டுக்கு பின் தாய் கைது
ரூ.60,000 விற்கப்பட்ட குழந்தை: ஓராண்டுக்கு பின் தாய் கைது
ADDED : மார் 16, 2025 02:53 AM
பல்லாரி: கர்நாடகாவில், கடந்தாண்டு 60,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை, ஆந்திர மாநிலத்துக்குச் சென்று போலீசார் மீட்டனர். குழந்தையின் தாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தின் எண்ணுக்கு, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி போன் அழைப்பு வந்தது.
வழக்கு பதிவு
அதில் பேசிய நபர், 'விம்ஸ் எனும் பல்லாரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 2024 பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை, 14 நாட்களுக்கு பின், பிப்., 20ம் தேதி 60,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது' என கூறிவிட்டு, இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, பல்லாரி போலீஸ் நிலையத்துக்கு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார், விம்ஸ் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அப்போது போனில் வந்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணை
குழந்தையை பெற்ற பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்தனர். அவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்பவரிடம் 60,000 ரூபாய்க்கு குழந்தையை விற்றதாக தெரிவித்தார்.
குழந்தையை வாங்கிய நவீன் குமாரை போலீசார் தேடி வந்தனர்.
அவரது தொழில் காரணமாக தென் மாநிலங்களுக்குச் சென்று வந்ததால், அவரை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக ஆந்திர மாநிலம், ஆலுாரில் தன் வீட்டுக்கு வந்த நவீன் குமாரை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், பல்லாரி பெண்ணிடம் குழந்தையை வாங்கியதாக தெரிவித்தார்.
குழந்தை பெற்ற பெண்ணுக்கும், வாங்கிய நபருக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது. குழந்தை இருப்பதாக, நவீன் குமாருக்கு தகவல் கொடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குழந்தை விற்கப்பட்டு ஓராண்டுக்கு பின் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.