ஐஸ்கிரீமில் கிடந்த விரல்: யாருடையது என கண்டுபிடிப்பு
ஐஸ்கிரீமில் கிடந்த விரல்: யாருடையது என கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 19, 2024 12:28 PM

மும்பை: மும்பையில் 'ஆன்லைன்' வாயிலாக, 'ஆர்டர்' செய்த ஐஸ்கிரீமில் விரல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, ஐஸ்கிரீம் ஆலையில் பணிபுரிந்த ஊழியரின் விரல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் டாக்டர் ஓர்லெம் பிரெண்டன் செராவ், (வயது 26). மும்பையின் மலாட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார். டாக்டர் ஓர்லெம், பாதி ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்தபின் உள்ளே வித்தியாசமான பொருள் தட்டுப்பட்டது. அது நகத்துடன் இருந்ததால், மனித விரல் என்பது தெரியவந்தது. இவர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த விரல் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார். அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும், அந்த நபரின் டி.என்.ஏ.,வும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கும்.