ADDED : மே 24, 2025 08:36 PM
புதுடில்லி:ராஜஸ்தானில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டவர், ரோஹினியில் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், பிரபல தாதா கோகி கும்பலைச் சேர்ந்த விகாஸ் என்ற சகா என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், புதுடில்லி ரோஹிணி பர்வாலா சவுக்கில், விகாஸ் பதுங்கி இருப்பதாக டில்லி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, பர்வாலா சவுக்கில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பைக்கில் சென்ற விகாஷை வண்டியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால், அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். போலீசார் கொடுத்த பதிலடியில், விகாஷின் வலது காலில் தோட்டா பாய்ந்து சரிந்து விழுந்தார். போலீசார் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், ஒரு மொபைல் போன் மற்றும் திருடப்பட்ட பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விகாஷ் மீது ஹரியானாவிலும் கொலை உட்பட ஐந்து குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.