/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூண்டோடு மாற்றம்
/
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூண்டோடு மாற்றம்
ADDED : ஜூலை 05, 2024 11:00 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய 9 சுகாதார ஆய்வாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு கூண்டோடு மாற்றப்பட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு பொது சுகாதார பிரிவில் மாநகர நகர நல அலுவலர் கீழ் 12 சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல் திண்டுக்கல்லிலேயே பணியாற்றினர். இந்நிலையில் 2023 ஜனவரியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நகராட்சி நிர்வாக பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் அலுவலர்கள் வெளியூருக்கு மாற்றப்பட வேண்டும் என அரசாணை வந்தது. இருந்த போதிலும் திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் யாரும் வேலூர் மாவட்டங்களுக்கு மாற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று திண்டுக்கல் மாநகராட்சியில் சுகாதார பிரிவில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, ரெங்கராஜ், காமராஜ், முகமது ஹனிபா, பாலமுருகன், செல்வராணி, கீதா, லாவண்யா, கேசவன் ஆகிய 9 பேர் நேற்று அதிரடியாக கோவை, தென்காசி, மதுரை,கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் சேர்ந்து மாநகர நல அலுவலராக பணிபுரிந்த டாக்டர் பரிதாவணி மீது மேயர் இளமதியிடம் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து டாக்டர் பரிதாவணி 3 நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாக துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.