/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை கலெக்டர் ஆபீசில் கட்டபொம்மன் சிலை மாயம்
/
நெல்லை கலெக்டர் ஆபீசில் கட்டபொம்மன் சிலை மாயம்
ADDED : ஜூலை 25, 2024 10:02 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆள் உயர சிலையை காணவில்லை. மீண்டும் சிலையை வைக்காவிட்டால், ஜூலை 29ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன.
கடந்த 1986ல் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படும் போது, துாத்துக்குடி மாவட்டத்திற்கு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் எனவும், திருநெல்வேலிக்கு, திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் எனவும் பெயரிடப்பட்டது.
அப்போது, திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆள் உயர சிலை நிறுவப்பட்டது. பின், அந்த சிலை கலெக்டர் மனுக்கள் வாங்கும் கட்டடத்தில் வைக்கப்பட்டது. சில வாரங்களாக அந்த சிலையை காணவில்லை.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக, விடுதலைக்களம் உள்ளிட்ட சில அமைப்புகள் அறிவித்துள்ளன.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில்,'கடந்தாண்டு டிசம்பர் 17, 18 ல் பெய்த மழையின் போது சிலை அடிப்பாகம் சேதமடைந்தது. அதனை சரி செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் சிலை நிறுவப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.