/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தளி ரோட்டில் தத்தளிக்கும் வாகனங்கள் நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னை
/
தளி ரோட்டில் தத்தளிக்கும் வாகனங்கள் நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னை
தளி ரோட்டில் தத்தளிக்கும் வாகனங்கள் நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னை
தளி ரோட்டில் தத்தளிக்கும் வாகனங்கள் நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னை
ADDED : ஜூன் 21, 2024 11:50 PM
உடுமலை:தளி ரோட்டில், அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தளி ரோடு பிரிகிறது. இந்த ரோட்டில், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், அரசுப்பள்ளிகள், கிளை நுாலகம் அமைந்துள்ளன.
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான, திருமூர்த்திமலை, அமராவதி அணை, மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரோடு வழியாகவே, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் செல்ல வேண்டும்.
மேலும், பஸ் ஸ்டாண்டில் இருந்து, சுற்றுலா தலங்கள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும், இந்த ரோடு வழியாகவே செல்கின்றன; நகருக்குள் நுழையவும் தளி ரோட்டையே பயன்படுத்துகின்றனர்.
இதனால், காலை, மாலை நேரங்களில், தளி ரோட்டில், போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கிளை நுாலகம் முதல் சிக்னல் வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், தளி ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்றினர்; அங்குள்ள கடைகளின் முன், இரு சக்கர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய சுழற்சி முறை பின்பற்றப்பட்டது. இதனால், நெரிசலும், விபத்துகளும் தவிர்க்கப்பட்டது.
தற்போது தளி ரோட்டில், கார்கள் நிறுத்த தடைவிதிக்கப்பட்டு, குட்டைத்திடலில், பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறையை யாரும் கண்டுகொள்வதில்லை.
ரோட்டோரத்தில், இருபுறங்களிலும் கார்களை நிறுத்துவதால், எதிரே வரும் வாகனங்களுக்கு கூட வழிவிட முடியாத நிலை உருவாகி, நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது.
நகரின் முக்கிய ரோட்டில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசாரை ஒருங்கிணைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்த வேண்டும்.
பார்க்கிங் விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தளி ரோட்டில், நீண்ட காலமாக நிலவும் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என, நகர மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.