கொள்ளிடம் கதவணை கட்டுமானம் விரைவாக முடிக்க அரசு உத்தரவு
கொள்ளிடம் கதவணை கட்டுமானம் விரைவாக முடிக்க அரசு உத்தரவு
ADDED : ஜூலை 14, 2024 01:10 AM

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணிகளை, ஒரு மாதத்தில் முடிக்கும்படி அரசு கெடு விதித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், காவிரி மட்டுமின்றி கொள்ளிடம் ஆறும் உள்ளது. காவிரியில் வெள்ள சேதம் ஏற்படுவதை தடுப்பதற்கு, கொள்ளிடம் ஆற்றின் வழியாக அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டினால், பல டி.எம்.சி., நீரை சேமித்து, பாசனம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும்.
அ.தி.மு.க., ஆட்சியில், கொள்ளிடம் ஆற்றில் கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இடையே கதவணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஆதனுார் - குமாரமங்கலம் இடையே கதவணை கட்டும் பணிகள், 496 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டன.
நிலம் எடுப்பு பணிகளுக்கு மட்டும், 31.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த கதவணையில், 0.33 டி.எம்.சி., நீரை சேமிப்பதால், 26,810 ஏக்கர் நிலங்களுக்கு நேரடியாக பாசனம் கிடைக்கும்.
நிலத்தடி நீர் செறிவூட்டுதல் வாயிலாக, 4,411 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் கிடைக்கும் என்று, மதிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, இந்த கதவணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை கதவணை மதகுகள், சாலை அமைக்கும் பணிகள் உள்பட, 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
நிலம் கையகப்படுத்தாததால், கரைகளை பலப்படுத்துதல், சர்வீஸ் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இழுபறியாக உள்ளன. இப்பணிகளை ஒரு மாதத்தில் முடித்து, கதவணையை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தொடர்ச்சியாக பணிகளை கண்காணிக்கும்படி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.