ADDED : ஜூன் 12, 2026 10:43 PM

- நமது நிருபர் -:
மாலையில் டீயுடன், ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிடுவது பலரின் பழக்கமாகும். கடைக்கு சென்று நொறுக்கு தீனி வாங்குவதை விட, பிரட் இருந்தால், வீட்டிலேயே சுவையான பக்கோடா செய்யலாம். செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், ஓமம், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் போன்று நன்றாக கலக்கவும். இதை, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதன்பின், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய் துாள், கரம் மசாலா, அமெச்சூர் பொடி, சீரக பொடி சேர்த்து கிளறவும். பொடியாக கொத்துமல்லி தழையை போட்டு கிளறி, ஆற விடவும்.
இரண்டு பிரட் ஸ்லைஸ்களை எடுத்து கொள்ளவும். ஒரு பிரட் ஸ்லைஸ் மீது, உருளைக்கிழங்கு மசாலா வைத்து, சமமாக பரப்பவும். இதன் மீது மற்றொரு பிரட்டை வைத்து மூடவும். இதை முக்கோண வடிவில் வெட்டவும். இவற்றை ஏற்கனவே தயாரித்து வைத்த, கடலை மாவு பேஸ்டில் முக்கி எடுக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் முக்கோண வடிவில் வெட்டி வைத்துள்ள பிரட்களை, எண்ணெயில் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்தெடுத்தால், சுவையான பிரட் பக்கோடா தயார். இதை கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக் கும்!
