PUBLISHED ON : ஜூன் 29, 2025

மனநல மருத்துவத்தில் சபிதாவுக்கு இது 25வது ஆண்டு. மகப்பேறு மருத்துவராக விரும்பியவரை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியின் மனநல மருத்துவத் துறைக்கு தலைவர் ஆக்கிவிட்டது காலம்.
மனிதர்கள், சம்பவங்கள், தருணங்கள், வார்த்தைகள், மனங்கள் அடங்கிய சில கூட்டு ஞாபகங்களே மருத்துவர் சபிதாவின் இப்பயணம்!
மறக்க முடியா இரு தேதிகள்முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் மறைந்த 1996 மே 19ம் தேதி பேருந்துகள் எதுவும் இயங்கலை. அடுத்தநாள் நான் மதுரை மருத்துவக் கல்லுாரியில இருந்தாதான் என் முதுநிலை அட்மிஷன் உறுதியாகும்!
அழுற என்னை ஒருபக்கம் சமாதானப்படுத்திக்கிட்டே எங்கப்பா ஒவ்வொரு பேருந்து ஓட்டுனர்கிட்டேயும் போய் கெஞ்சுறார். ஒருத்தர் தைரியமா முன்வந்தார். 'டாக்டர் வெ.சபிதா எம்.டி.,' உருவாக அவரும் ஒரு காரணம்!
கலைந்த புள்ளிகள் இணைஞ்சு அழகான கோலமா தெரியுறது மாதிரி என் வாழ்க்கை எனக்கு தெரிஞ்ச தினம்... 2021 பிப்ரவரி 15; அன்னைக்குதான் ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில மனநல மருத்துவத் துறைக்கு தலைவரா சேர்ந்தேன். ஹிந்தி 'மத்யமா' தேர்வுல மாநிலத்துலேயே முதலிடம் வந்தப்போ சிறுமி சபிதா மனசுல சிறகடிச்ச பட்டாம்பூச்சிகள் மறுபடியும் சிறகு விரிச்சது அன்னைக்குதான்!
ஒரு தருணம் - மருத்துவ கலந்தாய்வுல இந்த படிப்பை தேர்வு பண்ணிட்டாலும் என்னமோ எனக்கு திருப்தி இல்லை. முதல்நாள்... கல்லுாரி வளாகத்துல இருந்த பிள்ளையார் முன்னாடி, 'எஸ் - நோ'ன்னு சீட்டு போட்டுப் பார்த்தேன்; 'எஸ்' வந்தது!
சில வார்த்தைகள் - 'எதிர்காலத்துல 100 பேர்ல ஒருத்தர் மகப்பேறு மருத்துவரா இருப்பார்; 1,000 பேர்ல ஒருத்தர் மனநல மருத்துவரா இருப்பார்; நீ அந்த நுாறுல ஒருத்தியா, ஆயிரத்துல ஒருத்தியா'ன்னு கேட்டார் ஒரு பேராசிரியர்!
'மனநல மருத்துவத் துறையில நம்மால எந்தளவுக்கு ஜெயிக்க முடியும்'னு தவிச்சுட்டு இருந்தப்போ கைப்பிடிச்சு என்னை அழைச்சுட்டுப் போனது பிள்ளையார் சொன்ன அந்த 'எஸ்'ஸும், பேராசிரியரோட இந்த வார்த்தைகளும் தான்!
'மேடம்... எனக்கு கணவரா வரப்போறவர்கிட்டே கடந்த காலங்கள்ல எனக்கிருந்த பிரச்னைகளைப் பற்றி விளக்க முடியுமா... ப்ளீஸ்!' - என்கிட்டே சிகிச்சைக்கு வந்திருந்த பெண். 'நாங்க குழந்தை பெத்துக்க முடிவு பண்ணியிருக்கோம் டாக்டர்; இந்தநேரத்துல உங்க ஆலோசனையும் எங்களுக்கு வேணும்!' - இது அந்த பெண்ணோட கணவர்.'நீங்க இல்லைன்னா எங்கம்மா இல்லை;
எங்கம்மா இல்லைன்னா நான் இல்லை மேடம்!' - இது, இப்போ கல்லுாரி படிக்கிற அவங்க மகள். இத்தனை ஆண்டு பணி அனுபவத்துல, இந்த மூணு மனசும் என் மனசுக்குள்ளே இன்னும் கமகமன்னு இருக்கு.
டாக்டர் வெ.சபிதா, தலைவர், மனநல மருத்துவ துறை,அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி, சென்னை.