PUBLISHED ON : ஜூன் 29, 2025

திருநெல்வேலி - திருச்செந்துார் சாலையில் 30 கி.மீ., தொலைவில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில். இதனுள் திருவேங்கடமுடையான் மண்டபம். அதன் நுழைவாயில் சுவரின் இடது ஓரத்தில்... ஒன்றரை அடி உயர குறத்தி சிலை!
இடது தோளில் குழந்தை; இடது கையில் அக்குழந்தைக்கான தின்பண்ட கிண்ணம்; வலது கை மற்றொரு குழந்தையின் தலையை அழுத்திப் பிடித்திருக்க, அதன் கையிலும் பண்டம். கொஞ்சம் உற்று நோக்கினால், வலது தோளில் தொங்கும் துாளியில் குழந்தை இருப்பது தெரியும்!
கழுத்தில் பாசி, பவளமணி மாலைகள், கைகளில் காப்பு, வளையல்கள் அணிந்திருக்கும் இம்மலை குறத்தி, முன்நெற்றி முடியை சேர்த்தெடுத்து கொண்டை போட்டிருப்பது அவள் எளிய மகள் என்பதை உணர்த்துகிறது!
'அவளது இடது கை தாங்கியிருக்கும் கூடையானது பனை ஓலையில் செய்யப்பட்டது' என்பதை பட்டை பின்னலும், 'அவள் நடந்து கொண்டிருக்கிறாள்' என்பதை ஆடைகளில் விரியும் கோடுகளும் உணர்த்துவதாகச் சொல்கிறார் சிற்பக்கலையில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளும் பொன்னி.
'கோவில் சார்ந்த கலைகளில் கடவுள் உருவங்கள், புராண, இதிகாச நாயகர்களை பாண்டிய, சோழ மன்னர்கள் சிலையாக்கி இருக்க, எளிய மக்களையும் தங்கள் படைப்புகளில் நாயக்கர்கள் இடம்பெறச் செய்திருக்கின்றனர்' என்று புரிய வைக்கிறாள் கல்லில் மின்னும் இக்குறத்தி.