நெளியும் ரசிகர்கள் : 'நாகபந்தம்' 30 நிமிட காட்சிகள் குறைப்பு
தெலுங்கு திரையுலகில் சமீப காலமாகவே பல படங்கள் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடும் விதமாக வெளியாகின்றன. அதே சமயம் படம் வெளியான முதல் நாளிலேயே, இந்த அதிகமான நேரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர்களின் விமர்சனம் காரணமாக, மறுநாளே 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைக்கப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில், 3 மணி 15 நிமிடம் ஓடும் விதமாக வெளியான 'நாகபந்தம்' தற்போது 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டு இரண்டே முக்கால் மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ராம் சரணின் 'பெத்தி', பிரபாஸின் 'ராஜா சாப்', அதிவி சேஷின் 'டகாய்ட்' ஆகிய படங்களும் வெளியீட்டிற்குப் பிறகு இதே போல விமர்சனங்களைச் சந்தித்து பல நிமிடங்கள் குறைக்கப்பட்டன. பிரபாஸ், ராம்சரண் போன்றவர்களின் படங்களே அதிக நேரம் ஓடினாலும் சுவாரஸ்யம் இல்லையென்றால் ரசிகர்கள் இருக்கையில் அமர முடியாமல் நெளிகிறார்கள் என்கிற நிலையில், மிகப்பெரிய அளவில் நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்கள் நடித்த 'நாகபந்தம்' போன்ற படங்கள் எந்த நம்பிக்கையில் மூன்றே கால் மணி நேரம் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் விதமாக வெளியாகின்றன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனி வரும் நாட்களில் இதற்கு ஒரு என்ட் கார்டு போடப்படுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.