‛தாதா'வாக கங்குலி வாழ்க்கை படம் : முதல் பார்வை வெளியீடு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தாதா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகிறது. 'தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அவரது வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, விக்ரமாதித்யா மோத்வானே இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம், கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் 2002ல் இங்கிலாந்திற்கு எதிரான நாட்வெஸ்ட் டிராபியில் வெற்றி பெற்ற போது லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி தனது ஜெர்சியை கழட்டி சுழற்றி கொண்டாடுவார். இதையே படத்தின் முதல் பார்வை போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.
இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.
இதனுடன் இப்படம் 2027 மே 14ம் தேதி, திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படம் உருவானாலும் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியிடுகின்றனர்.