சினிமாவில் சீறி வரும் சிங்கப்பெண்கள்
இந்திய சினிமா என்பது ஹீரோக்களின் ஆதிக்கமாகவே கடந்த காலங்களிலும் இருந்தது, இப்போதும் இருந்து வருகிறது. ஹீரோயின்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த சில படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது.
100 ஆண்டு கால இந்திய சினிமாவில் இதுவரையில் சுமார் 1,00,000 படங்கள் வரை வெளியாகி இருக்கலாம். அவற்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் சில ஹீரோயின்களின் படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. அவை கூட இன்னும் 10 படங்களைத் தாண்டவில்லை.
தெலுங்கில் முதல் ரூ.100 கோடி
சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'மா இன்ட்டி பங்காரம்' தெலுங்குப் படம் கடந்த மாதம் வெளிவந்தது. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு கதாநாயகியின் முதல் 100 கோடி படம் இது என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நடித்து 2018ல் வெளிவந்த 'மகாநடி' படம் 85 கோடி வசூலைக் கடந்ததே தெலுங்குப் பட கதாநாயகி ஒருவரது அதிகபட்ச வசூலாக இருந்தது. அப்படம் கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. அந்த சாதனையை 8 வருடங்களுக்குப் பிறகு முறியடித்து 100 கோடி என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறார் சமந்தா. இருவருமே தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
அனுஷ்கா டாப்
'மகாநடி' படத்திற்கு அடுத்து அனுஷ்கா ஷெட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து 2015ல் வெளிவந்த 'ருத்ரமாதேவி' படம் 80 கோடி வசூலையும், அவர் நடித்து 2009ல் வெளிவந்த அருந்ததி' படம் சுமார் 70 கோடி வசூலையும் பெற்றுள்ளது. அனுஷ்கா நடித்து 2018ல் வெளிவந்த 'பாகமதி' படம் 65 கோடியை வசூலித்துள்ளது. 50 கோடி வசூலைக் கடந்த மூன்று படங்களை தனக்கான சாதனையாக வைத்திருக்கிறார் அனுஷ்கா. இவரது பூர்வீகமும் தெலுங்கு இல்லை என்பது கூடுதல் தகவல்.
தென்னிந்திய அளவில் அதிகம் பேசப்படும் நடிகையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நயன்தாரா கூட இந்த அளவிற்கான வசூல் படங்களைத் தந்ததில்லை.
இந்திய அளவில் டாப் 3
இந்திய அளவில் வசூல் சாதனை என்று பார்த்தால் 2017ல் சைரா வாசிம் நடித்து வெளிவந்த 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' ஹிந்திப் படம் 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 15 கோடிதான் என்கிறார்கள்.
அதற்கடுத்து மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து 2025ல் வெளிவந்த 'லோகா சாப்டர் 1 - சந்திரா' படம் 300 கோடியை வசூலித்துள்ளது. அப்படத்தின் பட்ஜெட் 30 கோடி மட்டுமே.
300 கோடி வசூலைக் கடந்த மற்றொரு படமாக 2023ல் அடா சர்மா உள்ளிட்ட சில நடிகையர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'தி கேரளா ஸ்டோரி' ஹிந்திப் படம் அமைந்தது. மதமாற்ற சர்ச்சை குறித்த படமாக வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி வசூலை அள்ளிக் குவித்தது. படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வாயை இந்த வசூல் அடைத்துவிட்டது.
2022ல் ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'கங்குபாய் கத்தியவாடி' படம் 200 கோடி வசூலைக் கடந்தது. அப்படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி. அப்படம் ஆலியா பட்டிற்கு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. மேலும் சில தனியார் விருதுகளையும் அப்படம் அவருக்குப் பெற்றுத் தந்தது.
முதல் ரூ.200 கோடி
2018ல் ஆலியா பட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'ராஸி' படம் 200 கோடி வசூலைக் கடந்தது. கதாநாயகி ஒருவரது படம் 200 கோடி வசூலைக் கடந்தது அதுவே முதல் முறை. அப்படத்தின் பட்ஜெட் அதிகபட்சமாக 40 கோடி.
மதர் இந்தியா நர்கீஸ்
நர்கீஸ் நடித்து 1957ல் வெளிவந்த 'மதர் இந்தியா' திரைப்படம் முதன் முதலில் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்தது. தற்போதைய பணமதிப்பின்படி பார்த்தால் அது 1000 கோடி என்று கணக்கிடலாம் என்றும் சொல்கிறார்கள். இன்றைய கதாநாயகியரின் படங்களுக்கு முன்னுதாரணமாக படமாக அப்படம் அமைந்தது.
ஹேமமாலினி, ஸ்ரீதேவி
அதன்பின் 1972ல் ஹேமமாலினி இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த 'சீதா அவுர் கீதா' படம் பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு படம். அதற்கடுத்து ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த 'சாந்தினி' படமும் பெரும் வெற்றியைப் பெற்றது.
இதுவரையில் வெளிவந்த ஒரு லட்சம் படங்களில் 10 படங்கள் கூட இல்லை என்ற சாதனை என்பது வரும் காலத்தில் போகப் போக அதிகமாகலாம். அதற்கான ஒரு சாட்சியாக சமந்தா நடித்து வெளிவந்த 'மா இன்ட்டி பங்காரம்' படம் அமைந்துள்ளது.
சிங்கப்பெண்கள்
பெண் இயக்குனர்கள் இன்னும் அதிகமாக வந்தால் அவர்கள் அவர்களது பார்வையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்னும் அதிகமான படங்களை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கும், கதாநாயகர்களுக்கும் பெண்களும், கதாநாயகிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பது விரைவில் அடுத்தடுத்து நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இன்றைய திரையுலகில் பல பெண்கள் உதவி இயக்குனர்களாகவும் பல்வேறு சினிமாத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
சிங்கப் பெண்கள் சினிமாவிலும் இருக்கிறார்கள் என்பதை சினிமா ரசிகர்களுக்கு சீக்கிரமே புரிய வைப்பார்கள் அவர்கள்.