இறுதிச்சடங்குகளில் அநாகரிகம் ; கல்லூரி விழாவில் மஞ்சு வாரியர் காட்டம்
சமீப காலமாக முக்கியமான திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து காலமாகி வருவது திரை உலகிற்கு பேரிழப்பாக மாறி வருகிறது. அவர்களது அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்குகளின் போது, குறிப்பாக இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியவர்களின் மறைவின் போது சில மீடியாக்கள் நடந்து கொண்ட விதம் சமீப காலமாகவே தொடர்ந்து விவாதப் பொருளாக மாறி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கவுரவித்து விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை மஞ்சு வாரியர் கலந்துகொண்டார். அப்போது சமூகத்தில் நிலவும் சில பொறுப்பற்ற போக்குகளை கடுமையாக விமர்சித்தார்.
சமீபத்தில் மறைந்த மலையாள நடிகர் சலீம் குமார் மற்றும் தமிழ் இயக்குனர் பாக்யராஜ் ஆகியோரின் இறுதிச் சடங்குகளின் போது அங்கிருந்தவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். துக்கமான தருணத்தில் கூட பலரும் தனிமனித உணர்வுகளை மதிக்காமல் அநாகரிகமாக நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி பேசிய அவர், நாம் எங்கே நிற்கிறோம்? நாம் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் மற்றவர்களை புகைப்படம் எடுப்பதற்கு முன்னதாக அவர்களிடம் அனுமதி கேட்கும் முறை உள்ளது. அதேபோன்ற விழிப்புணர்வு நம்மிடமும் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திப் பேசினார்.