முதல் பெரிய வெற்றியைப் பெற்ற அமலா, நாகார்ஜுனா மகன்
தெலுங்குத் திரையுலகத்தில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே முன்னணி நடிகர்களாக உயர போராடி வருகிறார்கள். மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுக்குத்தான் வரவேற்பும், வசூலும் அதிகமாக இருந்து வருகிறது.
தெலுங்குத் திரையுலகத்தின் எவர்கிரீன் கதாநாயகனாக நாகார்ஜுனா, தமிழிலும் பல படங்களில் நடித்த அமலா ஆகியோரது மகன் அகில் தெலுங்கில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க கடந்த 10 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறார்.
2015ல் அவர் கதாநாயகனாக அறிமுகமான 'அகில்' படம் தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்து வந்த 'ஹலோ, மிஸ்டர் மஜ்னு' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. 2021ல் அவரது நான்காவது படமாக வெளிவந்த 'மோஸ் எலிஜிபிள் பேச்சுலர்' படம்தான் அவரது முதல் வெற்றி. அந்தப் படம் 50 கோடி வசூலித்தது.
அதற்கடுத்து 2023ல் வெளிவந்த 'ஏஜன்ட்' படம் படுதோல்வியை சந்தித்தது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அகில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லெனின்' படம் வசூல் ரீதியாக நன்றாக ஓடி வருகிறது. அவரது முதல் பெரிய வெற்றியாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாட்களில் இப்படம் 61 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அகிலின் முன்னாள் அண்ணியான சமந்தா நடித்து வெளிவந்த 'மா இன்ட்டி பங்காரம்' படம் 100 கோடி வசூலைக் கடந்தது. அவரே 100 கோடியைத் தொட்ட பின்பு, அகில் 100 கோடியைத் தொடுவாரா என 'லெனின்' படம் வெளியாகும் முன்பு டோலிவுட்டில் கிசுகிசுத்தார்கள். அது நடக்குமா என்பது வரும் நாட்களில் தெரியும்.