தி பாரடைஸ் டீசர் பின்னணி இசையால் விமர்சனங்களை சந்திக்கும் அனிருத்
தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகி வரும் தி பாரடைஸ் படத்தில் இடம்பெற்ற ஆயா ஷேர் பாடல் மூலம் இந்த ஆண்டின் மிக வைரலான பாடலை அனிருத் வழங்கினார். 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், ரசிகர்களும் அனிருத்திடமிருந்து அடுத்தடுத்த ஹிட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இருப்பினும், சமீபத்தில் வெளியான தி பாரடைஸ் படத்தின் டீசரில் இடம்பெற்ற பின்னணி இசை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒரு நிமிட நீளமுள்ள இந்த டீசர், படத்தின் கதைக் களத்தையும் நானியின் தீவிரமான மற்றும் வன்முறை நிறைந்த புதிய தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், அனிருத்தின் வழக்கமான அதிரடியான பின்னணி இசை இதில் விடுபட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக, தேவரா பார்ட் 1 போன்ற படங்களுக்கு அனிருத் வழங்கிய அக்னி பிழம்பான பின்னணி இசை மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட நிலையில், தற்போது இந்த டீசர் இசையை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் படக்குழுவோ, படம் இன்னும் தயாரிப்பு நிலையிலேயே இருக்கும்போது, ஒரு நிமிட டீசரை மட்டும் வைத்து பின்னணி இசையை மதிப்பிடுவது சரியல்ல. படத்தின் இறுதி படத்தொகுப்பு முடிந்த பிறகே அனிருத், தன் முழுமையான பின்னணி இசைப் பணியை முடிப்பார் . அப்போது அனைவரும் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இந்த தி பாரடைஸ் படம் செப்டம்பர் 24 அன்று வெளியாகவுள்ளது.