ஹிந்து கோயில் விழாவில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கிய பரியா அப்துல்லா!
தெலுங்கில் ‛ஜாதி ரத்னாலு' என்ற படத்தில் அறிமுகமானவர் பரியா அப்துல்லா. அதையடுத்து லைக் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப், ராவணாசூரா, ஆ அம்மாயி குறிஞ்சி மீகு செப்பாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், தற்போது சந்தீப் கிஷன் இயக்கத்தில் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற போனால் திருவிழாவில் கலந்துகொண்ட நடிகை பரியா அப்துல்லா சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார். பாரம்பரிய விழாவில் அவர் கலந்து கொண்டதை பலரும் பாராட்டிய நிலையில், ஒரு தரப்பினர் இஸ்லாமியப் பெண் ஒருவர் எப்படி ஹிந்து திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பரியா வெளியிட்டுள்ள ஒரு காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், தன் மீது வெறுப்பைப் பரப்புபவர்களுக்கும் நல்லதே நடக்கணும் என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, கொண்டாடும் குடும்பத்தில் தான் வளர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளில் இருந்த உண்மையும், அவரது உணர்ச்சிவசப்பட்ட நிலையும் பலரின் நெஞ்சைத் தொட்டுள்ளது. அதையடுத்து தற்போது பரியா அப்துல்லாவுக்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.