யோகி பாபு - சத்யா இணைந்துள்ள புதிய படத்தின் தலைப்பு வெளியானது!
காமெடி வேடங்களில் மட்டுமின்றி, ‛மண்டேலா, பொம்மை நாயகி, லக்கி மேன், போட்' போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டைப் பெற்றவர் யோகி பாபு.
சமீபகாலமாக தமிழ் தவிர மாற்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் அவர், ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‛ஜவான்', தெலுங்கில் பிரபாஸ் நடித்த ‛தி ராஜா சாப்' போன்ற படங்களிலும் நடித்தார். இந்நிலையில் தற்போது தெலுங்கு காமெடியன் சத்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பவன் பாசம்செட்டி என்பவர் இயக்கி வருகிறார். இவர் தெலுங்கில் நாக ஷவுரியா நடித்த ‛ரங்கபலி' படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானவர்.
தற்போதைய தகவல்களின்படி, இந்த நகைச்சுவை படத்திற்கு ‛கோல்டன் பாக்யம்' என தலைப்பு வைத்துள்ளார்கள். முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இருவரும் ஒன்றாகக் கைகோர்த்துள்ளதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.