குணசித்ர நாயகியாக பிசியான பானு பிரியா
சினிமாவில் அறிமுகமாகிறவர்கள் எல்லோருமே ஹீரோயின்களாகி விடுவதில்லை. சிலர் தங்களுக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். லிசி ஆண்டனி, வினோதினி, கீதா கைலாசம், ஷீலா ராஜ்குமார் இப்படி பலரை உதாரணமாக சொல்லலாம்.
அந்த வரிசையில் இப்போது வந்திப்பவர் 'மொத ராத்திரி' படத்தில் பக்ஸ் மனைவியாக நடித்த பானு பிரியா. ஆனால் இது அவருக்கு முதல் படமல்ல. ஏற்கெனவே வெளியாகி பல பாராட்டுகளை பெற்ற 'கூழாங்கல்' படத்தில் அந்த படத்தின் நாயகனுக்கு மனைவியாக நடித்திருந்தார். நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவு கண்டவர், லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கிறார். பக்ருதீன் மாஸ்டர் நாடகக்குழுவில் இணைந்தவர் அங்கிருந்து முன்னணி மீடியா நிறுவனங்களில் வேலை செய்து பின்பு சினிமாவில் நுழைந்தார்.
தனது சினிமா பயணம் பற்றி பானு பிரியா கூறும்போது “பக்ருதீன் சார் மூலமாக 'கூழாங்கல்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கி குவிக்கும் என அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. என் கரியரில் அடுத்த நிலைக்கு போகும் வாய்ப்பாக 'தாய் கிழவி' படம் அமைந்தது. இப்போது 'மொத ராத்திரி' படத்தில் பக்ஸ் மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பலரிடமும் பாராட்டுகளை இந்த கதாபாத்திரம் பெற்று தந்துள்ளது.
அடுத்து வெற்றிமாறன் சாரின் 'ராஜன் வகையறா' படத்தில் கிஷோர் சார் மனைவி நடித்து வருகிறேன். இதுமட்டுமல்லாமல், சந்தானம் சார் கதாநாயகனாக நடிக்கும் 'லவ் பைட்', தனுஷின் 'ஓம்' மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறேன். பெரிய இயக்குநர்கள் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது”என்கிறார்.