உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 20 சர்வதேச விருதுகள் பெற்ற யானை மரம் : இயக்குனர் பேரரசுவின் கோரிக்கை

20 சர்வதேச விருதுகள் பெற்ற யானை மரம் : இயக்குனர் பேரரசுவின் கோரிக்கை

ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛யானை மரம்'. மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் நடித்துள்ளனர். இதுவரை 20 சர்வதேச விருதுகள் இப்படம் பெற்றுள்ளது. உலக நாடுகளில் 16 இடங்களில் திரையிடப்பட்டு, பாராட்டுக்கள் பெற்று வருகிறது.

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். அவன் தனது சிறு வயதில் நட்டு வைத்த மா விதை இப்போது யானையின் உருவத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறான். அந்த யானை மரத்தை நண்பனாக பாவித்து அதனிடம் தன் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த சமூகத்தில் அவனுக்கான உரிமை கிடைத்ததா? அவனுக்கும் யானை மரத்திற்கும் உண்டான நட்பு என்ன ஆனது? என்பதே இந்த திரைப்படத்தின் கதை.

இந்த படம் குறித்து இயக்குனர் பேரரசு கூறியது, ‛‛ 'யானை மரம்' என்ற திரைப்படம் பார்த்தேன். என்னை, என் சிறுவயது பிராயத்தை பின் நோக்கி இழுத்துச் சென்ற அற்புத படைப்பு அது. இயக்குனர் ராமையா ரவிச்சந்திரன் படத்தை மட்டும் இயக்கவில்லை, நம்மையும் இயக்குகிறார். யானை மரத்திற்கு நீராக சமூக நீதியையும், உரமாக மனித நேயத்தையும் இட்டிருக்கிறார். முக்கியமாக மாணவ, மாணவிகள் அனைவரும் காண வேண்டிய அறிவுப்பூர்வ படைப்பு இத்தமிழக அரசு இந்த படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் படியான நிலையை உருவாக்க வேண்டும்
என்கிறார்.

விரைவில் இப்படம் திரைக்கும் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !