லதா ராவ் தவிப்பு : விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்
சின்னத் திரையுலகின் பிரபலமான நடிகை லதா ராவ். நிமிர்ந்து நில், தில்லாலங்கடி, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சுழல் உள்ளிட்ட சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமும் படபடப்பும் அடைந்தார். விமான நிலையத்தில், பணம் செலுத்தி சானிட்டரி நாப்கின் பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறதா என்று பணியில் இருந்த பெண் ஊழியர்களை விசாரித்தபோது, அந்த திட்டம் தற்போது செயல்பாட்டில் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் லதா ராவ், கேட் எண் 1ல் இருந்து, கேட் எண் 7க்கு சென்று அருகில் இருந்த பார்மசிக்கு ஓடினார். ஆனால், ஊழியர் இல்லை. பின்னர் காத்திருந்து, ஊழியர் வந்ததும் நாப்கின் வாங்கிவிட்டு கேட் 1 பகுதிக்கு வந்தார். அதற்குள் போர்டிங் தொடங்கி விட்டது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: மாதவிடாய் என்பது எல்லா பெண்களுக்கும் ஏற்படக்கூடியது. குறிப்பாக பெண்கள் பயணங்களின்போது கைப்பைகளில் சானிட்டரி நாப்கின் இருக்கிறதா என்பதையும் கட்டாயம் சோதித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது சம்பந்தப்பட்ட பெண்களுக்கோ? அல்லது பயணத்தில் இருக்கும் வேறு பெண்களுக்கோ? நிச்சயம் உதவியாக இருக்கும். என்று பதிவிட்டுள்ளார்.
லதா ராவின் பதிவு வைரலானதால் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் “சென்னை விமான நிலையத்தில் லேடிஸ் ரெஸ்ட் ரூம்களில், சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் செயல்பாட்டில் இருந்தன. அதை தவறாக உபயோகிப்பதாக புகார்கள் வந்ததால், அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டது. விமான நிலையத்தில் அனைத்து லேடிஸ் ரெஸ்ட் ரூம்களிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மிஷின்கள் பொருத்தப்பட உள்ளது. அக்டோபர் முதல் தேதியில் இருந்து சானிட்டரி நாப்கின் பிரச்னைகள் பெண் பயணிகளுக்கு ஏற்படாது” என்று கூறியுள்ளனர்.