சாருகேசி
தயாரிப்பு : அர்ஜூன் ராஜேந்திரன்
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
நடிப்பு : ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி, சத்யராஜ், ராஜ்அய்யப்பா, ரம்யாபாண்டியன், தலைவாசல்விஜய், சமத்திரக்கனி.
ஒளிப்பதிவு : சஞ்சய்
இசை : தேவா
வெளியான தேதி : ஜூன் 12, 2026
நேரம் : 2 மணிரேநம் 26 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5
கர்நாடக இசை மேதை ஒய்.ஜி.மகேந்திரனுக்கு திடீரென ஞாபகமறதி நோய் ஏற்படுகிறது. மனைவி சுகாசினியை கூட யார் என்று கேட்கிறார். இதற்கிடையில் அவர் மகன் ராஜ் அய்யப்பாவும் தவறான வழியில் செல்கிறார். வீட்டுக்கு வந்த மருமகள் ரம்யா பாண்டியனும் பழைய பகையை மனதில் வைத்து குடும்பத்தினரை மிரட்டுகிறார், மரியாதை இல்லாமல் நடத்துகிறார். இந்த சூழ்நிலையில் அந்த வீட்டில் நடப்பது என்ன? ஒய்.ஜி.மகேந்திரன் குணமடைந்தாரா? மீண்டும் அந்த குடும்பத்தில் நிம்மதி, சங்கீதம், சந்தோஷம் 'கச்சேரி' செய்ததா என்பது சாருகேசி படத்தின் கதை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்
ஒய்.ஜி.மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை தழுவி, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இதை சினிமாவா எடுக்கலாம் என சொல்ல, இந்த படத்தை இயக்கி இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அதனால், படம் முழுக்க ஒய்.ஜி.மகேந்திரன் டச், இசை சாம்ராஜ்யம் தான். 75 வயதிலும் கதைநாயகனாக, கர்நாடக சங்கீத பாடகராக மிரட்டியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். தனது மகனின் தவறான செயலால் கலங்குகிற இடங்களில், தனது டிரைவர், நண்பனான தலைவாசல் விஜயிடம் பாசத்தை பொழிகிற இடங்களில், மனைவி சுகாசினியிடம் அன்பை காண்பிக்கிற இடங்களில், மருமகள் மிரட்டும்போது பதறும் இடங்களில், கடைசியில் மறதிநோயால் பாதிக்கப்பட்டு தவிக்கிற இடங்களில் தேர்ந்த நடிப்பை தந்து இருக்கிறார். கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய அரைமணிநேரம் அவ்வளவு எனர்ஜியுடன் நடித்து இருக்கிறார். அந்த இடங்கள், அந்த கிளைமாக்ஸ் பாடல் பிரமாதம். இது இசை சம்பந்தப்பட்ட கதை என்பதால், ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் சீரியஸ்தனம் மட்டுமே, வழக்கமான அந்த ஹியூமர் டச் இல்லை
ஓய்.ஜி.மகேந்திரன் மனைவியாக வரும் சுகாசினி பாசத்தை கொட்டி நடித்தியிருக்கிறார். அவரின் ஹோம்லியான கெட்அப், பாசமான வார்த்தைகள், கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், மருமகள் மிரட்டிகிற நிலையில் தவிக்கிற இடங்கள் படத்துக்கு பிளஸ். அந்த குடும்ப அபிமானி, டிரைவராக வரும் தலைவாசல் விஜய் தனக்குரிய பாணியில் நடித்து தள்ளியிருக்கிறார். டாக்டராக வரும் ஜெயபிரகாஷ் இயல்பாக நடித்து இருக்கிறார்.
ஓய்.ஜி.மகேந்திரன் மகன் ராஜ் அய்யப்பா, மருமகள் ரம்யா பாண்டியனுக்கு கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர், அதை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். சமுத்திரக்கனி, மதுவந்தி கவுரவ வேடத்தில் வந்து செல்கிறார்கள். இவர்களை தவிர, யேசுநாதர் மாதிரியான தோற்றத்தில் கடவுள் மாதிரி வந்து அவ்வப்போது தத்துவம் பேசுகிறார் சத்யராஜ். அதில் சில சீன் ஓகே. சில சீன் செட்டாகவில்லை.
படத்தின் பலமே இசையும், அது சம்பந்தப்பட்ட சீன்கள் தான். அதை குறையில்லாமல் செய்து இருக்கிறார் தேவா. பா.விஜய் வரிகளில் சங்கர் மகாதேவன் பாடல்கள், ஒய்.ஜி.மகேந்திரன் இசைப்பாடல்கள் மனதை லயிக்க வைக்கிறது. குறிப்பாக, அந்த கிளைமாக்ஸ் பாடல், அது உருவாகும் விதம், அடுத்து நடக்கும் விஷயங்கள் மறக்க முடியாதது. நாடகத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் என்பதால், ஆங்காங்கே நாடகத்தனம், அந்த மாதிரி நடிப்பு, டயலாக் வருவதை தவிர்க்க முடியவில்லை. முழுக்க இசையை மட்டும் காண்பிக்காமல் குடும்ப பிரச்னை, ஞாபக மறதி, பிளாஷ்பேக் ,கடவுள் வழியாக தீர்வு சொல்வது புதுமை. சங்கராபரணம், சிந்துபைரவி மாதிரி இல்லாவிட்டாலும் ஓரளவு ரசிக்கலாம்.
நீண்ட காலத்துக்குபின் கத்தி, ரத்தம், வன்முறை, காட்டு கூச்சல், நெகட்டிவிட்டி இல்லாத அக்மார்க் நல்ல படம். பாசிட்டிவ் கருத்துகளை சொல்கிறது, இசைப் பிரியர்கள் இன்னும் ரசிக்கலாம்.
சாருகேசி - ஒரு நல்ல பாரம்பரிய இசை கச்சேரிக்கு சென்று வந்த உணர்வு