தமிழ் திரையிசையின் பொற்காலம் எம்.எஸ்.வி.,
“கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்று கவிபாடிய கவியரசர் கண்ணதாசனும், கருத்துச் சிதைவின்றி காதுக்கோர் இனிய கானம் பாடிய மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனும் இணைந்து படைத்த திரையிசைக் கோலங்கள்தான் இன்றும் கோடானு கோடி மனித மனங்களுக்கு ஆறுதலையும், அகமகிழ்வையும் தந்து, ஓர் அருமருந்தாய் இருந்து வருகின்றது. இந்த இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணிதான் தமிழ் திரையிசையின் பொற்காலம். எம்.எஸ்.வி.,யின் 11வது நினைவு தினம் இன்று (ஜூலை 14).
1960களில் வீரியம் அடையத் தொடங்கிய இவ்விருவரின் படைப்புகள், பாசம், நேசம், சோகம், காதல், தத்துவம், வீரம், தெய்வீகம் என அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் தந்து, தமிழின் அழகையும், இசையின் நுணுக்கங்களையும் கடைக்கோடி திரையிசை ரசிகனும் அறிந்து மகிழும் வண்ணம் உருவாக்கிவிட்டுச் சென்ற இவ்விருவரின் பங்களிப்புதான் தமிழ் திரையிசைக்கே மகுடம் சூட்டியது என்றால் அது மிகையன்று.
மலர்ந்தும் மலராத…
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே… வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே… “சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா… கனவில் நினையாத காலம் இடைவந்து பிரித்த கதை சொல்லவா…” என்று சகோதரப் பாசத்தின் ஆழத்தை, சங்கத் தமிழில் பாடிய கவிஞரின் வார்த்தைகளுக்கு சாகாவரம் பெற்ற மெட்டமைத்து, சகோதரப் பாசத்தின் உச்சம் என்பதே இதுதான் என்பதை உலகுக்கே உணர்த்தும் ஓர் உன்னதப் பாடலாகத் தந்து, தமிழ் திரையிசையின் சரித்திரத்தில் இடம் பிடித்தார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். இவ்விருவரின் படைப்பாற்றலில் பிறந்த இந்தப் பாடல்தான் சகோதரப் பாசத்தின் விலாசமாக இன்றும் நிலைத்து நிற்கின்றது.
மயக்கமா கலக்கமா…
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. வாடி நின்றா…ல் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்” என்று விரக்தியின் உச்சிக்கு சென்று, வாழ்க்கையின் விளிம்பில் நின்று கொண்டு, வாழ்வை தொலைக்க நினைத்த எத்தனையோ வாலிப உள்ளங்களுக்கு தன்னம்பிக்கை தந்த டானிக்காக கவிஞர் தந்த பாடல்தான் இந்த “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா” என்ற பாடல்.
கவிஞரின் சமகாலக் கவிஞராய் திரையிசைப் பணியில் பயணித்து வந்த கவிஞர் வாலிக்கே ஓர் உத்வேகத்தைத் தந்த, ஓர் உன்னதப் பாடலான இந்தப் பாடலிலும் எம் எஸ் விஸ்வநாதனின் இசைக் கோர்வை என்பது, ஈருடல் ஓருயிர் என்பதுபோல் கவிஞரின் எண்ண ஓட்டங்களை முன்பே அறிந்து, இவர் இசையை வழங்கியிருப்பாரோ? என்றும், இவரது இசை நுணுக்கங்களை முன் கூட்டியே அறிந்ததால்தான் கவிஞர் வார்த்தைகளை இவ்வாறு கொட்டித் தீர்த்திருக்கின்றாரோ? என்றும் ஓர் பிரம்மையை பாடலைக் கேட்டு மகிழும் ஒவ்வொரு தருணமும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் இப்பாடல்.
இலக்கணம் மாறுதோ…
“நிழல் நிஜமாகிறது” திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலிலும் இவ்விருவரின் புரிதலும், பணியின் நேர்த்தியும் நமக்கு வியப்பையே உண்டு பண்ணும். கதையின் நாயகன், நாயகி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய போதும், ஒரு கட்டத்தில் நாயகி, நாயகன் மீது சந்தேகம் கொள்கின்றாள். இருந்தாலும் அவன் நடத்தையின் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்க மனமின்றி, காதலால் ஏற்பட்ட மாற்றங்களையும், அவளது மன உணர்வுகளையும் நாயகனுக்கு தெரியப்படுத்தி, அதற்கு நல்லதொரு விளக்கம் வேண்டி, நாயகனைப் பார்த்து நாயகி பாடுவதாக கவிஞர் எழுதிய வரிகள்தான் இவை.
“என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன், உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன், புரியாததாலே திரைப்போட்டு வைத்தேன், திரைப்போட்ட போதும் அணை போட்டதில்லை, மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ, விளக்கி வைப்பாயோ…” என ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்ட இருவெறு பொருள் தரும் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உயர்ந்த இலக்கியச் சுவையோடு கவிஞர் தந்த இந்தப் பாடலுக்கு மோகன ராகத்தில் மெட்டமைத்து, கேட்போரின் உள்ளங்களை மோகத்தில் மூழ்கச் செய்திருப்பார் எம் எஸ் விஸ்வநாதன்.
உள்ளத்தில் நல்ல உள்ளம்…
“தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணன் இல்லை, ஊர் பழி ஏற்றாயடா… நானும் உன் பழி கொண்டேனடா”, “மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா”, “செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா… வஞ்சகன் கண்ணனடா” என்று மகாபாரத யுத்தத்தில், மரண தருவாயில் இருக்கும் கர்ணனைப் பார்த்து பகவான் கண்ணனே வருந்திப் பாடுவதுபோல் தெய்வீகச் சொற்களைக் கோர்த்து, எளிய தமிழ் உள்ளங்களுக்கும் மகாபாரதத்தைக் கொண்டு சேர்த்த கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு வலு சேர்க்கும் வண்ணம், தசை கிழிந்து மரணத்தை எதிர்நோக்கி, யுத்த களத்தில் சாய்ந்திருக்கும் கர்ணனை காண, பகவான் கண்ணன் வரும்போது ஷெனாய் என்ற இசைக் கருவியைக் கொண்டு, பாடலை ஆரம்பிக்கும் போதே, பார்க்கும் பார்வையாளர்களாகிய நம்மை மகாபாரத யுத்த களத்திற்கே கொண்டு சென்று அமர வைத்துவிடுவார் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். மேலும் இத்திரைப்படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இரண்டே நாட்களில் எழுதி முடிக்க, மூன்றே நாட்களில் முழுப் படத்திற்கான ஒலிப்பதிவும் செய்து முடிக்கப்பட்டது.
“சொன்னது நீதானா? சொல் சொல் சொல் என்னுயிரே…”, “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா”, “அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி”, “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்”, “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”, “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா”, “எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது” என கவிஞர் கண்ணதாசன் - எம் எஸ் விஸ்வநாதன் கூட்டணி படைத்துச் சென்ற பாடல்கள் ஒன்றல்ல இரண்டல்ல இப்படி ஆயிரக் கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்விரு ஜாம்பவான்களும் உடலால் இன்று நம்மோடு இல்லாமல் போனாலும் காலத்தால் என்றும் அழியாத அவர்கள் விட்டுச் சென்ற இந்தக் காவியப் பாடல்கள் மூலம் என்றும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.