உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்ஜிஆர் - சரோஜாதேவியின் பொற்கால திரைப்படங்கள்

எம்ஜிஆர் - சரோஜாதேவியின் பொற்கால திரைப்படங்கள்


குறும்பு விழி கொண்டு, பிஞ்சு மழலை மொழியோடு, கொஞ்சும் மொழி தமிழ் பேசி, தமிழ் நெஞ்சங்களை அள்ளிச் சென்ற 'கன்னடத்துப் பைங்களி', 'அபிநய சரஸ்வதி' என கலையுலகினரால் கொண்டாடி மகிழ்ந்த நடிகை பி சரோஜாதேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று… 1960களில் தமிழ் திரையுலகின் மும்மூர்த்திகளான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோருடன் இணைந்து பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் ஏற்று, தனது பண்பட்ட நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் திரை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருந்தவர் இவர். குறிப்பாக எம் ஜி ஆர் - சரோஜாதேவி இணை என்பது அக்காலத்தில் கலையுலகினாராலும், பார்வையாளர்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஒரு கனவுலக ஜோடியாகவே பார்க்கப்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவ்விருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை 26. இந்த இருபத்தி ஆறு திரைப்படங்களில் இவர்களது ஜோடிப் பொருத்தம் என்பது, நடிப்பு என்ற எல்லையை மீறி, அன்பை, அக்கரையை, ஆத்மார்த்தமான உறவை, ஆழமான காதலை சொல்லும் ஓர் அழகியலாகவே இருந்ததால்தான் இந்த இருவரின் நடிப்பில் வந்த படைப்புகள் எல்லாம் காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் காவியங்களாக இன்றும் நிலைத்திருக்கின்றன.

நாடோடி மன்னன்


1958ம் ஆண்டு எம் ஜி ஆரின் முதல் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்தான் இவர் முதன்மை நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் இவர் நடித்திருந்த பகுதியை மட்டும் கேவா கலரில் படமாக்கியிருந்தார் எம் ஜி ஆர். மேலும் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற “கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே இன்பக் காவியக் கனவே ஓவியமே” என்ற ஒரு கனவுப் பாடல் காட்சியில் எம் ஜி ஆரின் ஆர்ப்பரிக்கும் வசீகரமும், பி சரோஜாதேவியின் பேரழகும் பார்வையாளர்களின் மனங்களைக் கொள்ளை கொள்ள, அன்று ஆரம்பமானது இந்த இணையின் ஈடற்ற கலைப்பயணம்.
மாபெரும் வெற்றியை இத்திரைப்படம் சுவைத்திருந்தபோதும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எம் ஜி ஆரோடு இணைந்து வேறெந்த படங்களிலும் நடிக்காமல், சிவாஜி, ஜெமினிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் ஆகியோருடன் மட்டுமே நடித்து வந்த சரோஜாதேவி, 1961ம் ஆண்டுதான் எம் ஜி ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். “திருடாதே”, “தாய் சொல்லைத் தட்டாதே” ஆகிய படங்களின் மூலம் மீண்டும் எம் ஜி ஆருடன் ஜோடி சேர்ந்தார் சரோஜாதேவி.

பெரிய இடத்துப் பெண்


நிலக்கிழார் கைலாசம் பிள்ளையின் செல்ல மகள் 'புனிதா' என்ற கதாபாத்திரத்தில் சரோஜாதேவியும், முருகப்பன் என்ற விவசாயக் கூலித் தொழிலாளியாக எம் ஜி ஆரும் இணைந்து நடித்திருந்த இத்திரைப்படத்திலும் இவ்விருவரின் ஜோடிப் பொருத்தம், உடல் மொழி, நடிப்பு ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டச் செய்வதாகவே அமைந்திருக்கும். பிடிவாதமான கல்லூரி மாணவி 'புனிதா', அன்பை வெளிப்படுத்தும் முருகப்பனின் காதலி 'புனிதா', பின் அரவணைக்கத் துடிக்கும் முருகப்பனின் மனைவி 'புனிதா' என்ற இந்த மூன்று பகுதிகளிலும் சரோஜாதேவி மற்றும் எம் ஜி ஆரின் உடல் மொழி என்பது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தோடு ஒன்றி பயணிக்கச் செய்திருந்தது. திரையரங்குகளில் இத்திரைப்படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி, வெற்றி என்ற இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது.

படகோட்டி


'முத்தழகி' என்ற மீனவ இனப் பெண்ணாக சரோஜாதேவியும், 'மாணிக்கம்' என்ற மீனவராக எம் ஜி ஆரும் இணைந்து நடித்திருந்த இத்திரைப்படமும் இவ்விருவரின் ஜோடிப் பொருத்தத்தில் அமைந்த மற்றுமொரு வெற்றிச் சித்திரம். இது 'சரவணா பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் வண்ணப்படமாகவும் அமைந்திருந்தது என்பது இத்திரைப்படத்திற்கான கூடுதல் சிறப்பு. படத்தில் இவ்விருவரின் ஒப்பனை, ஆடை அலங்காரம் என ஒவ்வொன்றும் அளந்து வைத்தாற்போல் கனக்கச்சிதமாக பொருந்திப் போனதோடு, பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்தக் காலகட்டங்களில் வெளிவந்த பெரும்பாலான எம் ஜி ஆர் திரைப்படங்களில், படத்தின் நாயகி சரோஜாதேவியாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே மாறிப் போயிருந்தது.

எங்க வீட்டுப் பிள்ளை


விஜயா வாஹினி தயாரிப்பு நிறுவனத்திற்காக எம் ஜி ஆர் மற்றும் சரோஜாதேவி நடித்திருந்த ஒரு மெகா ஹிட் திரைப்படம். இத்திரைப்படமும் ஒரு வண்ணத்திரைப்படமே. 'நாடோடி மன்னன்' திரைப்படத்திற்குப் பின் எம் ஜி ஆர் இரட்டை வேடமேற்று நடித்திருந்த இத்திரைப்படத்தில், ஜமீன்தார் ரங்கநாதன் பிள்ளையின் மகள் லீலாவாக நடிகை சரோஜாதேவியும், ராமு, இளங்கோ என முற்றிலும் மாறுபட்ட இருவேறு கதாபாத்திரங்களில் எம் ஜி ஆரும் நடித்திருந்தனர். ஒரு ஜமீன்தாரின் மகளாக படத்தில் இவர் காட்டியிருக்கும் மிடுக்கு, ஆடை அணிமணிகள், கொஞ்சி கொஞ்சி வசனம் பேசும் இவரது பாணி என ஒவ்வொன்றும் அன்றைய ரசிகர்களை பெருவாரியாக ஈர்க்கச் செய்திருந்தது. குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு தனி செல்வாக்கை உருவாக்கி வைத்திருந்தார். படங்களில் இவர் அணிந்து வரும் ஆடை அணிமணிகள் போல் கடைகளில் வாங்கி அணியும் அளவிற்கு பெண் ரசிகர்கள் மத்தியில் ஒரு பேஷன் ஐக்கானிக்காகவே வலம் வந்தவர்தான் நடிகை பி சரோஜாதேவி.

அன்பே வா


1966ம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளிவந்த இத்திரைப்படத்தின் நாயகன் நாயகி, எம் ஜி ஆர் - சரோஜாதேவியே. ஏ வி எம் நிறுவனத்திற்காக எம் ஜி ஆர் நடித்துக் கொடுத்த ஒரே திரைப்படமான இத்திரைப்படம், வழக்கமான எம் ஜி ஆர் பட பாணியிலிருந்து விலகி, காதலை மட்டுமே மையப்படுத்தி, கலகலப்பான ஒரு கலர்புல் திரைப்படமாக உருவாக்கித் தந்திருந்தார் படத்தின் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர்.

இளம் தொழிலதிபர் ஜே.பி ஆக எம் ஜி ஆரும், பெற்றோருடன் சிம்லாவிற்கு சுற்றுலா வரும் கல்லூரி மாணவி கீதாவாக சரோஜாதேவியும் நடித்திருந்த இத்திரைப்படத்தில் இவ்விருவரின் ஜோடிப் பொருத்தம் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு வெகு இயல்பாக, நெருக்கமாக, ஊடலும் கூடலும் நிறைந்த ஒரு காவியக் காதலர்களாகவே வாழ்ந்திருப்பர் என்றால் அது மிகையன்று. படத்தில் எம் ஜி ஆர் பொய் சொல்லி சரோஜாதேவியை ஏமாற்றுவதும், ஏமாற்றமடைந்த பின் எம் ஜி ஆரிடம் அவர் காட்டும் முக பாவனை, உடல் மொழி, அவருக்கே உரித்தான அந்த கொஞ்சும் மொழி தமிழ் என அனைத்தும் பார்க்கும் பார்வையாளர்களாகிய நம்மை இவர்கள் நிஜ வாழ்விலும் உண்மையான காதலர்களாகத்தான் இருப்பார்களோ? என்ற ஒரு பிரம்மையை தோற்றுவிக்குமாறு இருக்கும்.

இது இந்தப் படத்திற்கு மட்டும் அல்ல. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 26 திரைப்படங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக சரோஜாதேவி - எம் ஜி ஆர் ஜோடி நடித்த அனைத்து திரைப்படங்களின் காதல் காட்சிகளிலும், எம் ஜி ஆர் சரோஜாதேவியிடம் காட்டும் குறும்புத்தனமும், அதற்கு சரோஜாதேவி வெளிப்படுத்தும் நாணம் கலந்த ஒரு பார்வையும் ரசிகர்களை சுண்டி இழுத்து, கட்டிப்போடும் வல்லமை படைத்தவையாகவே இருந்திருக்கின்றன என்பதை சினிமாவை நேசிக்கும் எவரும் மறுக்க இயாலதது. அந்த அளவிற்கு இவ்விருவரும் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு தலை சிறந்த ஐகானிக் ஜோடியாகத்தான் பார்க்கப்பட்டனர். முதல் படமான “நாடோடி மன்னன்”ல் இணைந்த இந்த ஜோடிப் பொருத்தம் 1967ல் வெளிவந்த “அரசகட்டளை” திரைப்படத்தில்தான் முற்று பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !