உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026ல் அதிக 100 கோடி படங்கள்: முன்னணியில் ஹிந்தி சினிமா

2026ல் அதிக 100 கோடி படங்கள்: முன்னணியில் ஹிந்தி சினிமா


2026ம் ஆண்டைப் பொறுத்தவரையில் ஹிந்தி சினிமாதான் சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் அம்மொழியில் வெளியான 'துரந்தர் 2' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதற்கடுத்து 'பார்டர் 2' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இவை தவிர 'பூத் பங்களா, தமால் 4, ஆவாரப்பன்” ஆகிய படங்கள் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தன. 100 கோடிக்கும் அதிகமான வசூல் படங்களாக, “வெல்கம் டு த ஜங்கிள், காக்டெயில் 2, ராஜா சிவாஜி' ஆகிய படங்கள் இருக்கின்றன. மொத்தமாக 100 கோடியைக் கடந்த படங்களாக 8 படங்கள் உள்ளன.

அதே சமயம் தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தெலுங்கில், “பெத்தி' படம் 400 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருக்கிறது. 'மன ஷங்கர வரபிரசாத் காரு', 300 கோடி வசூலையும், 'தி ராஜா சாப்' படம் 200 கோடி வசூலையும், 'இருமுடி, அனகனகா ஒக ராஜூ, மா இன்ட்டி பங்காரம், லெனின்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலையும் கடந்துள்ளன. 100 கோடியைக் கடந்த வசூல் படங்களாக 7 படங்கள் உள்ளன.

இதற்கடுத்து தமிழ் சினிமாவில், 'கருப்பு' படம் அதிகாரப்பூர்வமாக 340 கோடி வசூலைக் கடந்தது. 'ஜனநாயகன்' படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 200 கோடி வசூலையும், 'டிசி',100 கோடி வசூலையும் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'பராசக்தி' படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்றும் சொன்னார்கள். ஆக, மொத்தமாக 100 கோடி வசூல் கடந்த படங்களாக 5 படங்களே இருக்கின்றன.

மலையாளத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் 'திரிஷ்யம் 3' படம் 240 கோடி வசூலைக் கடந்தது. 'வாழ 2' படம் 200 கோடி வசூலையும், 'ஆடு 3, பெத்லகேம் குடும்ப யூனிட்' படங்கள் 100 கோடி வசூலையும் கடந்துள்ளன. மொத்தமாக 4 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.

இந்த வருடத்தில் மிகவும் பின் தங்கிய திரையுலகமாக கன்னட சினிமா உள்ளது. இந்த ஆண்டில் அவர்களின் ஒரே 100 கோடி படமாக 'டாக்ஸிக்' படம் மட்டுமே இருக்கிறது. 500 கோடி வசூலைக் கடந்தால் கூட இந்தப் படம் லாபத்தைக் கொடுக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

இந்தியத் திரையுலகம் என்று மொத்தமாகப் பார்த்தால் இந்த வருடத்தின் 8வது மாத நிறைவில் வெளியான படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 100 கோடி படங்கள் என்பது குறைவாகவே உள்ளது. எஞ்சியுள்ள நான்கு மாதங்களில் வெளியாக உள்ள படங்களில் எத்தனை வசூலைக் குவிக்கும் என்பதும் இப்போதைக்கு சொல்ல முடியாது.

எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் படுதோல்வி அடைந்ததும், மோசமான வசூலைக் கொடுத்தும் கடந்த மாதங்களில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. எனவே, வர உள்ள மாதங்களில் வெளியாக உள்ள படங்கள் அந்த அதிர்ச்சியை அதிசயமாக மாற்றினால்தான் வசூல் கொட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !